#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Thursday, October 7, 2010

ஐசிசி விருதுகள் 2010 – முழு விவரம்

சர்வதேச கிரிக்கெட்டின் ஆஸ்கார் என்று கருதப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் (International Cricket Council) வழங்கப்படும் ஐசிசி விருதுகள் (ICC Awards) வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களுரில் நடைபெற்றது. இதில் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டனர். 24.08.2009 தொடக்கம் 10.08.2010 வரையிலான காலப்பகுதியில் வீரர்கள், அணிகள பெற்ற பெறுபேறுகளை வைத்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு:

  • Cricketer of the year (வருடத்தின் சிறந்த கிரிக்கெட்டர்): சச்சின் டெண்டுல்கார்

இந்த காலப்பகுதியில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1064 ஓட்டங்களை 81.84 என்கின்ற சராசரியில் பெற்று இருக்கின்றார். அதே போல 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 914 ஓட்டங்களை 65.28 என்கிற சராசரியில் பெற்று இருக்கின்றார்.இந்த காலப்பகுதியிலேயே சச்சின் தென்னாபிரிக்காவிற்றுக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் 200 ஓட்டங்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சச்சினின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் முதலாவது ஐசிசி விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  • Test cricketer of the year (சிறந்த டெஸ்ட் வீரர்): வீரேந்தர் சேவாக்

இந்த காலப்பகுதியில் சேவாக் 10 போட்டிகளில் பங்கு பற்றி 1282 ஓட்டங்களை 85.46 என்கிற சராசரியில் பெற்று இருக்கின்றார். இந்த விருதை போன தடவை இந்திய அணியின் மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரானா கவுதம் காம்பீர் பெற்று இருந்ததும் குறிபிடத்தக்கது.


  • ODI cricketer of the year (சிறந்த ஒருநாள் போட்டி வீரர்): எபி டிவில்லியர்ஸ்

இந்த காலப்பகுதியில் டிவில்லியர்ஸ் 16 போட்டிகளில் பங்கு பற்றி 855 ஓட்டங்களை 71.25 என்கிற சராசரியிலும் 103.38 என்கிற strike rate லும் பெற்று இருக்கின்றார். இதில் 10 போட்டிகளில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் நான்கு போட்டிகளில் விக்கெட் காப்பாளராகவும் செயற்ப்பட்டு ஐந்து ஆட்டமிழப்புக்களையும் ஏற்ப்படுத்தி உள்ளார். விழாவில் டிவில்லியர்ஸ் பாடல் பாடி எல்லோரையும் அசத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


  • T20 Performance of the year (சிறந்த இருபதுக்குஇருபது பெறுபேறு): பிரெண்டன் மக்கலம்

இந்த ஆண்டு பெப்ரவரி இல் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு 20/20 போட்டியில் மக்கலம் 56 பந்துகளை எதிர்கொண்டு பெற்ற 116 ஓட்டங்களுக்கு (12 நான்கு ஓட்டங்கள், 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக) பெற்றது T20 Performance of the year ஆக விருது பெற்றது. இந்த விருதை மக்கலம் மைக்கேல் ஹஸ்ஸி (2010 உலகக்கிண்ண 20/20 போட்டி அரையிறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 பந்துகளை எதிர்கொண்டு பெற்ற 60 ஓட்டங்கள்), ரியான் மக்லாரன் (இது வரை நடந்த 20/20 போட்டிகளில் பெற்ற சிறந்த பந்து வீச்சு பெறுதியான 5/19 ஐ மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெற்றது), மகேல ஜெயவர்த்தனே(2010 உலகக்கிண்ண 20/20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 100 ஓட்டங்களை 64 பந்துகளில் பெற்றதும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 98 ஓட்டங்களை 56 பந்துகளில் பெற்றதும் ) ஆகியோருடன் போட்டி போட்டு கைப்பற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Emerging player of the year (சிறந்த வளர்ந்து வரும் வீரர்): ஸ்டீவன் பின்

இந்த விருதை 21 வயதான 6 அடியும் 7 அங்குலமுமான இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் வென்றுள்ளார். இந்த காலப்பகுதியில் 8 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 32 விக்கெட்டுக்களை 23.21 என்ற சராசரியில் வீழ்த்தி இருக்கின்றார். இதில் லோர்ட்ஸ் மைதானத்திலும் ஓல்ட்ரபோர்ட் மைதானத்திலும் தொடர்ச்சியாக நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட பெறுதியை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  • Womens cricketer of the year (வருடத்தின் சிறந்த பெண் கிரிக்கெட்டர்): ஷெல்லி நிட்ச்செகே

அவுஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீராங்கனையான ஷெல்லி நிட்ச்செகே இந்த விருதை வென்றார். இவர் இந்த காலப்பகுதியில் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 342 ஓட்டங்களை 57.0 என்ற சராசரியில் பெற்றதுடன் 12 விக்கெட்களை வீழ்த்தியும் உள்ளார். அத்துடன் 10 இருபதுக்குஇருபது போட்டிகளில் விளையாடி 265 ஓட்டங்களை குவித்ததுடன் 10 விக்கெட்களை வீழ்த்தியும் உள்ளார். இவர் இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற 2010 பெண்கள் 20/20 உலககிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி பெருவதற்க்கு முக்கிய பங்கு வகித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  • Associate player of the year : ரியான் டென் டஸ்சேட்(Ryan Ten Doeschate)

டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தடவை நெதர்லாந்து அணியை சேர்ந்த ரியான் டென் டஸ்சேட் இவ்விருதை பெற்றுகொள்கிறார். இவர் இவ்விருதை இம்முறை இரண்டவாது தடவையாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 இலும இந்த விருதை இவர் பெற்று இருக்கின்றார்.

இவர் இந்த காலப்பகுதியில் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கு பற்றி ஒரு சதம், மூன்று அரைசதம் அடங்கலாக 121.33 என்ற சராசரியில் ஓட்டங்களி குவித்துள்ளார். அதே போல ICC Intercontinental கிண்ணத்துக்கான போட்டி ஒன்றில் கென்யா அணிக்கு எதிராக 212 ஓட்டங்களை(22 நான்கு ஓட்டங்கள், 7 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக) ஆட்டமிழக்காமல்பெற்று இருந்தார்.அத்துடன் அதே போட்டியில் 174 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.


  • Umpire of the year (சிறந்த நடுவர்): அலீம் தார்

42 வயதான பாகிஸ்தானை சேர்ந்த அலீம் தார் இவ்விருதினை வென்றுள்ளார். இவரே கடந்த முறை கூட இவ்விருதினை வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.


  • Spirit of cricket award (ஒழுக்காற்று விதிகளை மதித்து செயல்படும் அணி): நியூசிலாந்து

நியூசிலாந்து அணி இந்த விருதை வெற்றி பெற்று இருக்கிறது.கடந்த முறையும் இவர்களே இந்த விருதை பெற்று இருந்தார்கள் என்பதும், இது அவர்கள் இந்த விருதை வெல்வது மூன்றாவது தடவை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  • ICC Test team of the year (இந்த வருடத்தின் ஐசிசி டெஸ்ட் அணி)

(1) வீரேந்தர் சேவாக்

(2) சைமன் கடிச்

(3) சச்சின் டெண்டுல்கர்

(4) ஹசிம் அம்லா

(5) குமார் சங்ககாரா

(6) ஜாக் கலிஸ்

(7) மகேந்திர சிங் தோனி(தலைவர் & விக்கெட் காப்பாளர்)

(8) கிராம் ஸ்வான்

(9) ஜேம்ஸ் அன்டர்சன்

(10) டேல் ஸ்டைன்

(11) டக் போலிஞர்

  • ICC ODI team of the year (இந்த வருடத்தின் ஐசிசி ஒருநாள் அணி)

(1) ஷேன் வாட்சன்

(2) சச்சின் டெண்டுல்கர்

(3) ரிக்கி பாண்டிங் (தலைவர்)

(4) எபி டிவில்லியர்ஸ்

(5) போல் காலிங்வூட்

(6) மகேந்திர சிங் தோனி (விக்கெட் காப்பாளர்)

(7) மைக்கேல் ஹஸ்ஸி

(8) டானியல் வெட்டோரி

(9) ஸ்டுவர்ட் பரோட்

(10) ரியான் ஹாரிஸ்

(11) டக் போலிஞர்