#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Thursday, December 30, 2010

வீழ்ச்சியின் பாதையில் செல்கிறதா அவுஸ்திரேலிய கிரிக்கெட்....?

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலிய அணி இழந்து இருக்கும் இந்த சமயத்தில் இப்பதிவை எழுதுவது மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

1990 களுக்கு பிறகு எந்தவொரு தொடரிலும் அவுஸ்திரேலிய அணி பங்கு பற்றினால் அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே தொடரை வெல்வதற்க்கான வாய்ப்பை அவுஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக இருப்பதாக பெரும்பாலானோர் கூறுவார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் பெருமளவுக்கு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொண்டு இருந்த அணி தற்போது மெல்ல மெல்ல பலமிழந்து வருகின்றதோ என அந்த அணி அடுத்தடுத்து அடைந்து வரும் தோல்விகள் எண்ண வைக்கின்றன.

இதே போல தான் 1980கள் காலப்பகுதி வரை அதிரடி துடுப்பாட்ட வீரர்கள், மிரட்டும் வேக பந்து வீச்சாளர்கள் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியும் மிகப் பெரிய பலவானாக திகழ்ந்து வந்தது. ஆனால் 1990களுக்கு பின்னர் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அனைவரும் ஏறத்தாழ சம காலத்தில் ஒய்வு பெற மேற்கிந்திய தீவுகள் அணி மெல்ல மெல்ல சரிய தொடங்கி இப்போது அதல பாதளத்தினுள் வீழ்ந்து கிடக்கின்றது. முன்னர் சிறப்பாக செயற்பட்ட வீரர்களினின் இடத்தை நிரப்ப சரியான புதிய வீரர்களை தயார் படுத்தாமையே இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது. இதில் பிரைன் லாரா மட்டும் விதி விலக்கு. லாரா மட்டும் சிறப்பாக செயற்பட்டாலும் மேற்கிந்திய தீவுகள் அணியால் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியாமல் போனதுக்கு இதற்க்கு நல்ல சாட்சி ஆகும்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஏற்பட்ட கதிதான் அவுஸ்திரேலிய அணிக்கும் ஏற்படுகின்றதோ என சந்தேகங்கள் ஏற்படுத்துகின்றன அவுஸ்திரேலிய அணி சமீப காலமாக பங்கு பற்றிய போட்டிகளின் முடிவுகள்.

1990களுக்கு பின்னர் மெல்ல மெல்லமாக கிரிக்கெட் உலகில் தனது பலத்தை அதிகரித்து வந்த அவுஸ்திரேலிய அணி 1999க்கு பிறகு முழுமையான ஆதிக்கத்தை நிலை நாட்டியது. 1996 உலககிண்ணத்தின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் எல்லா அணிகளையும் வெற்றி பெற்று முதல் தர டெஸ்ட் அணியாக ஜொலிக்க தொடங்கியது.

அதன் பின்னர் மார்க் டெய்லரின் ஓய்வின் பின்னர் ஸ்டீவ் வாஹ் தலைமை எற்க ஒரு நாள் தொடர்களிலும் தனது பலத்தை அதிகரித்து வந்தது. பின்னர் 1999 உலக கிண்ணத்தை ஸ்டீவ் வாஹ் தலைமையில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தனது கிரிக்கெட்டில் முழுமையான ஆதிக்கத்தை நிலை நாட்ட தொடங்கியது.


அது ஒரு காலம் அழகிய காலம்....நாமெல்லாம் சாம்பியன் ஆனா காலம்

1999 உலககிண்ணத்தில் 2007 உலககிண்ணம் வரையான காலப்பகுதியில்

அதன் பின்னர் 2007 உலககிண்ணம் வரையான காலப்பகுதியில் 29 டெஸ்ட் தொடர்களில் பங்கு பற்றி 24 தொடர்களில் வெற்றி பெற்றும் 3 டெஸ்ட் தொடரிகளில் தோல்வி அடைந்தும் 2 தொடர்களை சமபடுத்தியும் உள்ளது. வெற்றி பெற்ற 24 டெஸ்ட் தொடர்களில் 16 டெஸ்ட் தொடர்கள் White wash எனப்படும் Clean Sweap முறையில் பெற்ற வெற்றிகளாகும். அதே போல 43 ஒருநாள்த்தொடர்களில் பங்கு பற்றி 3 உலக கிண்ணங்கள், உட்ப்பட 29 தொடர்களை வெற்றி பெற்றும் 10 தொடர்களை இழந்தும் 4 தொடர்களை சமபடுத்தியும் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி சத வீதம் 82.75% ஆகவும் ஒரு நாள் போட்டிகளில் 67.44% வெற்றி சத வீதமாகவும் அமைந்துள்ளது

2007 உலககிண்ணத்திற்க்கு பின்னர் இருந்து இன்று வரையான காலப்பகுதியில்

2007 உலககிண்ணத்தை கைப்பற்றியதற்கு பின்னர் இருந்து இன்று வரையான காலப்பகுதி வரை பார்த்தால் (தற்போது நடை பெற்று கொண்டு இருக்கும் அஷேஸ் தொடர் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை) 13 டெஸ்ட் தொடர்களில் பங்கு பற்றி 8 தொடர்களில் வெற்றி பெற்றும் 4 டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடைந்தும் 1 தொடரை சமபடுத்தியும் உள்ளது. 4 டெஸ்ட் தொடர்கள் white wash முறையில் கைபற்ற பட்டது. அதே போல 20 ஒருநாள்த்தொடர்களில் பங்கு பற்றி மினி உலக கிண்ணம் உட்ப்பட 13 தொடர்களை வெற்றி பெற்றும் 6 தொடர்களை இழந்தும் 1 தொடரை சமபடுத்தியும் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி சத வீதம் 61.53% ஆகவும் ஒரு நாள் போட்டிகளில் 65.00% வெற்றி சத வீதமாகவும் அமைந்துள்ளது.

இவ்வ்விரு காலப்பகுதிகளையும் ஒப்பிட்டால் ஒருநாள் தொடர்களில் வெற்றி சத வீதத்தில் மாற்றம் தெரியா விட்டாலும் டெஸ்ட் தொடர்களின் வெற்றி சதவீதம் வெகுவாக குறைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும் ஒரு நாள் போட்டிகளில் கூட அதன் ஆதிக்கம் குறைந்து வருவதை அண்மையில் அவுஸ்திரேலியா வில் வைத்து இலங்கை அணி முதன் முதலாக அவுஸ்திரேலிய அணியை ஒரு தொடரில் தோற்க்கடித்ததை உறுதிப்படுத்துகின்றது.


அவுஸ்திரேலிய அணியின் இந்த வீழ்ச்சிகளுக்கான காரணங்கள்

1.பலம் மிக்க வீரர்களின் சம கால ஒய்வு

அவுஸ்திரேலிய அணியின் இந்த வீழ்ச்சிகளுக்கான காரணங்களை ஆராய்ந்தால் அதன் பலம் மிக்க வீரர்கள் ஏறத்தாழ சமகாலத்தில் ஒய்வு பெற்றதும் அவர்களின் இடதிற்கு பொருத்தமான வீரர்கக்ளை தெரிவு செய்யாமையுமே ஆகும். ஜஸ்டின் லங்கர், டேமியன் மார்ட்டின், ஷேன் வான் ஆகியோர் 2007 ஆஷஸ் தொடரின் பின்னரும் கிளென் மக்கராத் 2007 உலக கிண்ணத் தொடரின் பின்னரும் அடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹோக், ஸ்டுவர்ட் மக்கீல் ஆகியோர் 2008 ஆம் ஆண்டிலும் மத்தியு ஹைடன் 2009 ஆம் ஆண்டிலும் ஓய்வு பெற்றனர்.

2. அன்ரூ சைமன்ஸின் விலகல் / பலவீனமான மத்திய வரிசை

இது போதாது என்று அன்ரூ சைமன்ஸ் அணியின் ஒழுக்க விதிகளை மீறினார் என்ற குற்றசாட்டில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது உண்மையிலேயே அவுஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஏன் எனில் அன்ரூ சைமன்ஸ் அணியின் மத்திய வரிசையை நீண்ட காலமாக பலமாக்கி வந்தவர். மிக நெருக்கடியான தருணங்களில் எல்லாம் அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் (உதாரணம் : 2003 உலக கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற 143 ஓட்டங்கள் & அரை இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற 91 ஓட்டங்கள்).

அன்ரூ சைமன்ஸ் இல்லாமல் அணியின் மத்திய வரிசை பலவீனமாகவே உள்ளது. அன்ரூ சைமன்ஸ்க்கு பதிலாக தேர்ந்து எடுக்கப்பட்ட மார்கஸ் நோர்த்தும் ஆரம்பதில் பிரகாசித்து பின்னர் படிப்படியாக போர்ம் ஐ முழுவதுமாக இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மத்திய வரிசையில் விளையாடும் மற்றைய வீரர்கள் மைக் ஹஸ்ஸி, மைக்கேல் கிளார்க் போன்றவர்களின் சாராசரி நன்றாக இருந்தாலும் முக்கிய தருணங்களில் கைவிட்டு விடுவது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. அதிலும் மைக்கேல் கிளார்க் தனது காதலி தொடர்பான பிரச்சினையின் பின்னர் தனது போர்ம் ஐ முழுவதுமாக இழந்து வருகின்றார். எனினும் ஒருநாள் போட்டிகளில் கமேரூன் வைட் மத்திய வரிசையில் ஒரு அளவுக்கு பிரகாசித்து வருகின்றார்.

என்ன உங்க திறமை.....எல்லாம் அவ்வளவு தானா?



3. மிகப்பெரிய தாக்கத்தை தோற்றுவிக்காத ஆரம்ப துடுப்பாட்டம்/ தகுதியான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமை

டெஸ்ட் போட்டிகளில் சைமன் கடிச் & ஷேன் வட்சனின் ஆரம்ப துடுப்பாட்டம் ஓரளவிற்க்கு நன்றாக இருந்தாலும் சொல்லி கொள்ளும்படியாக (போட்டியினை வெற்றி பெறுவதற்க்கோ சமநிலைப்படுத்துவதற்க்கோ) அமையவில்லை. பிலிப் ஹுஜேஸ் இவர்கள் இருவரையும் விட சராசரி கூடியவர். இவருக்கு வாய்ப்புகளே கொடுக்கப்படுவதில்லை (தற்போது ஆஷஸ் போட்டியில் விளையாடி வருகின்றார்) அதே போல பில் ஜாக்ஸ் 19 இன்னிங்ஸ் இல் விளையாடி மூன்று சதங்கள் ,ஆறு அரைசதங்கள் உட்ப்பட நல்ல சராசரியும் (47.47) கொண்டவர். இவரை பற்றி அவுஸ்திரேலிய தேர்வாளர்கள் கருத்தில் எடுப்பதாகவே தெரியவில்லை. அதே போல ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக ஆடும் டேவிட வார்னர், ஷோன் மார்ஷ் போன்றவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

4. ஷேன் வார்ன் & மக்கராத்தின் இடம் இன்னும் மீள் நிரப்பபடாமை

இவர்கள் இருவரும் இணைந்து 1271 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 674 ஒருநாள் விக்கெட்டுகளையும் மொத்தமமக 1945 விக்கெட்டுகளை வீழ்த்திய அற்புதமான பந்துவீச்சு ஜோடியாகும். இவர்களின் ஒய்வு அதிகமாகவே பாதிக்கின்றது.

ஷேன் வார்ன் இல்லாத சமயங்களில் அணிக்கு ஒருநாள் போட்டிகளில் பிராட்ஹோக்கும் டெஸ்ட்போட்டிகளில் ஸ்ட்ரூவர்ட் மக்கீலும் கைகொடுத்து வந்தனர். இவர்கள் ஷேன் வார்ன் ஒய்வு பெற்ற பிறகு இன்னும் நீண்ட காலம் விளையாடி இருக்கலாம். ஆனால் அணியின் போதாத காலம் அவர்களும் வயது காரணமாக ஷேன் வார்ன் ஒய்வு பெற்ற சிறிது காலத்திலேயே அவர்களும் ஒய்வு பெற்றனர். அதன் பின்னர் எட்டு சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுதியும் பெரிய பலன்கள் கிடைக்கவில்லை.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை சில பந்து வீச்சாளர்கள் (பீட்டர் சிடில், டக் பொலிஞர், ரியான் ஹாரிஸ், கிளைன்ட் மக்கே) ஒரு அளவுக்கு சாதித்து கொண்டு வந்தாலும் அடிக்கடி உபாதைக்கு உள்ளாவது பெரிய சிக்கலை உண்டு பண்கின்றது. அதே போல ஒரு நாள் போட்டிகளில் ஷோன் டேய்ட் இன் அதி வேக பந்து வீச்சு நிச்சயம் நம்பிக்கை அளிக்க கூடியதாக இருக்கிறது. அதேவேளை மிச்சேல் ஜோன்சனை பிரதான பந்து வீச்சாளராக (primary bowler) டெஸ்ட்,ஒருநாள், இருபதுக்கு இருபது என அனைத்து போட்டிகளிலும் பயன் படுத்துமளவுக்கு அவர் தகுதியானவரா என சந்தேகம் எழுப்புகின்றது அவரது பெறுபேறுகள் மற்றும் inconsistant ஆனா அவரது பந்து வீச்சு (தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசினாலும் (6/38 & 3/44) அடுத்த டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக (29 ஓவர்களில் 134 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகள்) பந்து வீசினார் என்பதே இதற்கு நல்ல உதாரணம்.)

5. அடம் கில்கிறிஸ்ட்க்கு போல அதிரடியாக துடுப்பு எடுத்தாடும் விக்கெட் காப்பாளர் இல்லாமை

அடம் கில்கிறிஸ் எத்தனையோ சமயங்களில் டெஸ்ட்போட்டிகளில் பின்வரிசை பந்து வீச்சாளர்களுடன் இணைந்து அதிரடியாக துடுபெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி காப்பற்றி இருக்கின்றார். அதே போல டெஸ்ட் போட்டிகளில் ஏழாம் இலக்கத்தில துடுபெடுத்தாடி சராசரியாக 60 இனை நீண்ட காலமாக கொண்டு இருந்தார். அதே போல ஒரு நாள் போட்டிகளில் ஆரம்ப வீரராக வந்தும் கலக்கி எடுப்பார். இவரின் இடத்தை இப்போது இருக்கும் பிராட் ஹடினால் மட்டும் அல்ல மற்றைய விக்கெட் காப்பாளர்களால் கூட நிரப்ப முடியாமல் இருக்கிறது

ஏம்பா....இந்த bat ஐ கொஞ்சம் அகலமா செய்தாலாவது நாங்க ஜெயிக்கலாம்


6. அவுஸ்திரேலிய அணித்தேர்வாளர்களின் மோசமான தேர்வுகள்

முன் ஒருபோதும் இல்லாதவாறு அணித்தேர்வுகள் மிக மோசமாக இருகின்றன. மூன்றாவது மற்றும் நான்காவது அஷேஸ் போட்டிகளுக்கு அனுபவம் வாய்ந்த நேதன் ஹாரிட்ஸ், ஜேசன் க்ரேட்ஜா, ஸ்டீவ் ஒகேபீ போன்றவர்கள் இருக்க அனுபவமே இல்லாத மிட்செல் பியர் ஐ தேர்ந்து எடுத்து இருபது இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் ஸ்டீவ் சிமித்தை வைத்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா போல இவர் துடுப்பாட்ட வீரரா? பந்து வீச்சாளரா, ஆல்ரவுண்டரா என்று ஒன்றுமே புரியவில்லை.


அவுஸ்திரேலிய பிராந்திய அணிகளில் சிறப்பாக விளையாடும் எத்தனையோ வீரர்கள் இருகின்றனர். துடுப்பாட்டத்தில் Areon Finch, Wade, David Hussy, Adam Voges, Michel Klinger, Danial Christn, Phil Jaques, Brade Hodge, David Warner, Shaun Marsh போன்றவர்களும் பந்துவீச்சில் Dougie Bolinger, Ryan Harris, Client McKey, Stuat Clark,Shaun Tait,Steve Okeffe போன்றவர்களும் இருக்க திரும்ப திருப்ப கிளார்க், ஜோன்சன் போன்றவர்களை அணியில் வைத்து இருந்தால் அஷேஸ் தொடரை இழந்தது போல 2011 உலக கிண்ணத்தையும் இம்முறை இழக்க நேரிடலாம்.


நண்பர்களே....இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சு இருந்தால் இன்டலியிலும் தமிழ் மணத்திலும் தமிழ்10 இலும் வாக்கு போடுங்க.....!


Thursday, December 23, 2010

தமிழ் சினிமா 2010 – ஒரு பார்வை

2010 ஐ பொறுத்த வரையில் 2008, 2009 ஆம் ஆண்டுகள் போலவே நல்ல கதையம்சம் அல்லது அருமையான திரைக்கதை வடிவமைப்புக்கள் கொண்ட திரைப்படங்கள் ஓடியதும் வெறுமனமே ஹீரோக்களையும் அவர்களது (சகிக்க முடியாத) பில்டப்புகளையும் நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பிளாப் ஆகிவருவதும் அதிகரித்துள்ளது.இது தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் செல்வதை காட்டுகின்றது. இந்த ஆண்டு எனது மனதை கவர்ந்த திரைப்படங்களை பற்றி இங்கே கீழே விவரிக்கின்றேன்...இவை முற்றும் முழுதாக எனது விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தாலும் நல்ல கதை/ திரைக்கதை அல்லது இவ்விரண்டும் அருமையாக அமைந்த தரமான திரைப்படங்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றேன்.முக்கியமாக இவற்றை வசூல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவில்லை.

1.விண்ணை தாண்டி வருவாயா.....


காதலுக்கும் காதலர்களுக்கு இடையிலும் வருகின்ற பிரச்சினைகளை மிக யாதார்த்தமான அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டு இருக்கின்றது இத்திரைப்படம். படத்தின் பின்பகுதி சற்று நீளமாக இருந்து அலுப்புட்டினாலும் கெளதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆன திரைக்கதை உருவாக்கம் & வசனங்கள்(உலகத்தில எவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்...! இந்த வசனம் மறக்க முடியுமா...?), எ.ஆர் ரகுமானின் இசை/பாடல்கள், மனோஜ் பரஹம்ஷாவின் அற்புதமான ஒளிப்பதிவு, சிம்புவின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு(இதுக்கு முன்னாடி இவர் நடிச்சு பார்த்ததே இல்லையே.....) என்பன படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தின் வெற்றிக்கு உதவியது. 2000 ஆம் ஆண்டில் வந்த அலைபாயுதே திரைப்படம் இளைஞர்களிடையே பெற்ற வரவேற்ற்பை விட இதற்கு கூடுதலான வரவேற்பு கிடைத்தது.

2. அங்காடித்தெரு


முதலாளித்துவத்தின் சுரண்டல்களையும் வெளிப்பார்வைக்கு அழகாக தோற்றமளிக்கும் பெரிய வியாபார நிலையங்களின் தொழிலாளர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தும் அழுக்கான பக்கங்களையும் வெளிச்சம் போட்டு காட்டிய திரைப்படம் ஆகும். மகேஷ் & அஞ்சலியின் அருமையான நடிப்பு ,எ.வெங்கடேஷ் இன் மிரட்டும் வில்லத்தனமான நடிப்பு, எவருமே இதற்கு முன்னர் சொல்லாத புதுக்கதை ,அதை திறம்பட இயக்கிய வசந்த பாலன் இந்த திரைப்படத்திற்கு பலங்களாக அமைந்தது.

3. நாணயம்.



ஒரு பாங்(வங்கி) கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். பிரசன்னா ,சிபிராஜ் ,எஸ்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் நடித்து இருந்தனர். திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டு இருந்தது. எனினும் படம் பெரிதாக ஓடவில்லை.

4. தமிழ்ப்படம்


hollywood இல் சூப்பர் ஹிட் ஆனா திரைப்படங்களை எல்லாம் மொக்கை போட்டு ஒரு படம் எடுப்பார்கள். hollywood இல் இப்படி நிறைய படங்கள் வெளிவந்துள்ளன..ஆனால் தமிழில் இப்படியான திரைப்படங்கள் வருவதே இல்லை என்ற குறையை தமிழ்ப்படம் நீக்கி விட்டது. தமிழ் சினிமாவின் அபத்தங்களையும் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பண்ணும் ஓவர் ஹீரோயிசங்களையும்(ஒருவர் கூட மிச்சம் விடாமல் ) கிண்டல் அடித்தது இப்படம். இது போல நிறைப்படங்கள் வந்தால் தான் தமிழ் சினிமாவில் அபத்தமான திரைப்படங்கள் வருவது குறையும்.


5. இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்




கௌபாய் திரைப்படம் ஒன்றை தனியே கௌபாய் காலத்து கலாச்சாரதுடன் எடுக்காமல் அதனுடன் தமிழ்க்கலாச்சாரம், லேட்டஸ்ட் தமிழ் நாட்டு நிலவரங்களையும் சேர்த்து காமெடியில் பிரித்து மேய்ந்த படம் இது. நகைச்சுவை திரைபடங்களில் பெரிதாக லாஜிக் பார்க்க அவசியம் இல்லாத படியால் இதில் வரும் எல்லா காமெடிகளையும் ரசிக்க முடிகின்றது.


6. மதராசிப்பட்டணம்




டைட்டானிக் போல இருக்கின்றது, லாகன் சாயல் தெரிகின்றது போன்ற விமர்சனங்களையும் தாண்டி படம் வெற்றி பெற்றதுக்கு பழைய மெட்ராஸ் ஐ கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய செட்(கலை), தெளிவான திரைக்கதை, ஆர்யா எமிஜாக்சன், வி.எம்.ஹனிபா ஆகியோரின் நடிப்பு, ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள்/இசை என்பன அமைந்தது.பிரிட்டிஷ் காலத்தில் அதுவும் இந்தியா சுதந்திரம் அடைவத்ற்கு சிறிது காலத்திற்க்கு முன்னரான காலப்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் ஏற்ப்படும் ஒரு காதலை, அருமையாக சொல்லி இருந்தார் இயக்குனர் விஜய்.


7. களவாணி




கிரமாத்து திரைப்படங்களில் வரும் வன்முறைக்காட்சிகள், அழுக்கு ஹீரோ, சோக முடிவுகள் போன்ற காட்சிகள் இல்லாமல் முழுமையாக காமெடியும் யாதர்த்தமும் நிரப்பி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தஞ்சாவூர் பின்னணி(வழமையா மதுரையை தானே வைப்பாங்க), விமல், ஓவியா, கஞ்சா கறுப்பு என படத்தில் வந்த அனைவரினதும் நடிப்பு, கிராமத்து அழகை காட்டும் ஒளிப்பதிவு என்பன படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது.


8. வம்சம்.


கிராமங்களில் சத்தம் இல்லாமல் நடக்கும் வம்சப்பகைகளையும் பழிக்குபழி தீர்க்கும் படலங்களையும் யாதார்த்தத்துடுடன் எடுத்து இருந்தார்கள். அருள் நிதி, சுனைனா, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகியோரின் இயல்பான நடிப்பு, கஞ்சா கருப்புவின் காமெடி, அற்புதமான ஒளிப்பதிவு என்பன படத்திற்கு பலமாக அமைந்தது.

9. மைனா




படம் தொடங்கும் போது வழமையான கிராமத்து படம் போலவே ஆரம்பித்தாலும் பின்னர் வித்தியாசமான பாதையில் பயணித்து இருக்கிறதுக்கு இத்திரைப்படம். விதார்த், அமலா,தம்பி ராமையா ஆகியோரின் இயல்பான நடிப்பு, மலைப்பகுதிகளை அழகாக எடுத்துக்காட்டிய ஒளிப்பதிவு, இமானின் இசை/பாடல்கள் பிரபு சாலமனின் திறமையான திரைக்கதை வடிவமைப்பு போன்றன படத்திற்கு பலம் சேர்த்தன.

10. நந்தலாலா



ஒரு ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்களையும் தாண்டி பலரால் பாராட்டுக்களை பெற்று இருக்கிறது.இந்த திரைபடத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் பெரும்பாலான இதன் விமர்சனங்கள் படம் நன்றாக இருப்பதாக கூறுவதால் இதையும் இந்த பட்டியலுக்குள் சேர்த்துள்ளேன்.

2010 ஆம் ஆண்டு நன்றாக வசூல் அள்ளிய திரைப்படங்கள்

1. எந்திரன்

2. சிங்கம்

3. பையா

4. விண்ணை தாண்டி வருவாயா

5. மதராசிப்பட்டணம்

6. தமிழ்ப்படம்

7. களவாணி

8. வம்சம்

9. மைனா

10. நான் மகான் அல்ல

11. பாஸ் என்கின்ற பாஸ்கரன்

பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் அரதப் பழசான கதை, சொதப்பலான திரைக்கதை என்பவற்றினால் தோல்வி அடைந்துள்ளது. அவற்றின் விவரம்:

  1. அசல்
  2. கோவா
  3. ஆயிரத்தில் ஒருவன்
  4. தீராத விளையாட்டுப்பிள்ளை
  5. சுறா
  6. குட்டி
  7. ராவணன்
  8. தில்லாலங்கடி
  9. கச்சேரி ஆரம்பம்