#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Friday, May 20, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமும் தேர்வுக்குழுவின் குளறுபடிகளும்


அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது. இந்திய அணி உலககிண்ணத்தை கைப்பற்றி உலக சாம்பியன் ஆன பின்னர் நடைபெறும் முதலாவது சர்வதேசத்தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். தற்போதைய நிலையில் கிரிக்கெட் உலகில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் ஏறத்தாழ முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையிலும் அவர்களால் மீண்டும் ஒரு ஆதிக்கசக்தியாக தற்போதைய நிலையில் தீடிரென மீண்டு எழுந்து வரமுடியாத நிலையிலும் கிரிக்கெட் உலகின் புதிய ஆதிக்க சக்தியாக எந்த அணி மாறும் என்பதில் கிரிகெட் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

இந்திய அணி அப்படி மாறுவதற்கு அணி வீரர்களின் திறமையான செயற்பாட்டில் மட்டும் அன்றி இந்திய அணியின் தேர்வாளர்களின் சரியான தேர்விலும் தங்கி உள்ளது.அவர்களின் தேர்வு வீரர்களின் திறமையின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதாகவே தெரியவில்லை. அதற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ள அணியே ஒரு உதாரணம். பல திறமையான வீரர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. ஏறக்கனவே உலககிண்ணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அணி பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் உலககிண்ணத்தை வென்ற படியால் அவையு அடங்கி போயின.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் செய்து விளையாட தேர்ந்து எடுக்கப்பட்ட அணி:

Gautam Gambhir (captain), Suresh Raina (vice captain), Parthiv Patel (wk), Virat Kohli, Yuvraj Singh, S Badrinath, Rohit Sharma, Harbhajan Singh, R Ashwin, Praveen Kumar, Ishant Sharma, Munaf Patel, Vinay Kumar, Yusuf Pathan, Amit Mishra, Wriddhiman Saha (wk).

இந்திய அணி டெஸ்ட் போட்டி தர வரிசையில் ஏறக்கனவே முதலாவது இடத்தில இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுமளவுக்கு வலுவானதாக உள்ளதா என்பது கொஞ்சம் சந்தேகமே. துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் ஒரு போட்டியில் வெல்வதற்கு தேவையான எதிரணியின் இருபது விக்கெட்டுக்களை கைப்பற்றுவத்க்கான பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கானை தவிர வேறு எவருமே இல்லாமல் இருப்பது பெரிய பலவீனமே. இன்னும் எவ்வளவு காலத்துக்கு பந்துவீச்சில் ஜாகீர் கானை மட்டுமே நம்பி கொண்டு இருக்க போகின்றது இந்திய அணி? அவருக்கும் வயது ஏறிகொண்டே போகின்றது. தேர்வாளர்கள் திரும்ப திரும்ப விக்கெட் எடுக்க தெரியாத சிறிசாந்த், பிட்னெஸ் இல்லாத நெஹ்ரா, வினய் குமார், போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதை தவிர்த்து அபிமன்யு மிதுன், தற்போது ஐபிஎல் இல் கலக்கும் இஷாந்த் ஷர்மா, வருண் எரோன் போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கலாம்.

அபிமன்யு மிதுன்


அதே போல ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் விக்கெட் எடுக்கும் திறமை குறைந்து கொண்டே போகின்றது. நடந்து முடிந்த உலக கிண்ணத்தில் கூட ஹர்பஜன் சிங் 9 விக்கட்டுகளையே எடுத்து இருந்தார். (சராசரி 43.33) ஆனால் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான 15 விக்கேட்டுகளை யுவராஜ் சிங்க் எடுத்து இருந்தார் (சராசரி 25.13). ஆகவே அஸ்வினுக்கு தொடர்ச்சியாக சந்தர்ப்பம் வழங்குவது அவசியம். அதே போல இந்த ஐபிஎல் இல் கலக்கி கொண்டு இருக்கும் இரண்டு லெக் ஸ்பின்னர்கள் இக்பால் அப்துல்லா, ராகுல் சர்மா போன்றவர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்தல் நல்லது. டெஸ்ட் போட்டிகளில் அமித் மிஷ்ராவையோ ஒஜாவையோ இரண்டாவது சுழல் பந்துவீச்சாளாராக தேர்ந்து எடுக்கலாம்.

இக்பால் அப்துல்லா

ஒரு காலத்தில் நன்றாக துடுப்பாட்டமும் விக்கெட் கீப்பிங்கும் செய்ய தெரிந்த விக்கெட் காப்பாளர்கள் கிடைப்பது அரிதாகவே இந்திய அணிக்கு இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. டோனி க்கு பதிலாக விக்கெட் கீப்பிங்க்கில் ஈடுபட ரொபின் உத்தப்பா, அம்பாட்டி ராயுடு, நமன் ஓஜா போன்றவர்கள் இருக்கும்போது தெரிவளர்கள் திரும்ப திரும்ப பால் குடி மாறாத பார்த்திவ் பட்டேல் யும் விர்த்திமான் சகாவையும் தேர்ந்து எடுப்பது ஏனோ தெரியவில்லை. ரொபின் உத்தப்பா, அம்பாட்டி ராயுடு, போன்றவர்கள் விக்கெட் கீப்பிங்க்கில் மட்டும் அல்ல. அதிரடியாக துடுப்பு எடுத்தாடக்கூடியவர்களும் கூட.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டி துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரையில் மூன்றாவது இடமான டிராவிட் இன் இடமும் எந்த ஒரு வீரருமே நிலையான இடத்தை பிடிக்காத ஆறாவது இடமும் தான் கொஞ்சம் பலவீனங்களாக உள்ளது. இந்த இடங்களுக்கு நிச்சயமாக புஜாரா, முரளி விஜய், பத்ரிநார்த், அபினவ் முகுந்த் (முதல் தர போட்டிகளில் சராசரி 55.51) போன்றவர்களை தேர்ந்து எடுக்கலாம். மிகவும் திறமையான ஒரு துடுப்பட்ட வீரரான பத்ரிநார்த்க்கு (முதல் தர போட்டிகளில் பத்ரியின் சராசரி 62.31) உண்மையிலேயே சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். அதே போல மற்றுமொரு திறமையான தமிழக வீரரான அபினவ் முகுந்தை எல்லாம் ஐபிஎல் போட்டிகளில் கூட ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்பது நிச்சயம் வருத்தத்துக்கு உரியது.

அபினவ் முகுந்

ஒருநாள் துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரை கண்ணை மூடிகொண்டு பொறுப்பு இல்லாமல் குருட்டு ஆட்டம் ஆடி ஆட்டமிழக்கும் யூசுப் பதானை நீக்கலாம். யூசுப் பதானை விட அதிரடியாகவும் அதேவேளை பொறுப்புணர்வுடனும் விளையாடும் சவ்ரவ் திவாரி, அம்பாட்டி ராயுடு, ரொபின் உத்தப்பா, மனோஜ் திவாரி தற்போது ஐபிஎல் இல் கலக்கும் போல் வல்தாட்டி போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கலாம். அதே வேளை எந்த நேரமும் சோம்பல் தனத்துடனும் ஏனோ தானோ என்றும் விளையாடும் ரோஹித்சர்மா போன்றவர்களை எடுப்பதால் எந்த உபயோகமும் இல்லை. இவருக்கு ஏகப்பட்ட சந்தர்பங்கள் வழங்கப்பட்டு விட்டது.

அத்துடன் வருடத்தின் அனைத்து நாட்களுமே கிரிக்கெட் என்றாகிவிட்டது இப்போது. இவ்வாறு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடினால் வீரர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகுந்த சோர்வு அடைவார்கள். அத்துடன் காயத்துக்கு உள்ளாகவும் நேரிடும். உடல் வலிமையை தக்க வைப்பதும் சிரமம். எனவே போட்டிகளை திட்டமிட்டு சீரான கால இடைவேளையில் நடத்தலாம். அப்படி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட வேண்டி வரின் வீரர்களை சில வீரர்களுக்கு ஒய்வு கொடுத்து சில புதிய வீரர்களை பயன்படுத்தும் சுழற்சி முறையை பயன்படுத்தலாம். இதனால் புதிய வீரர்களின் திறமையும் சோதனை செய்து பார்க்கலாம். இந்த வருடம் இந்திய அணிக்கு மிக முக்கியமான இங்கிலாந்து அவுஸ்திரேலிய சுற்று பயணங்களும் உண்டு. ஆகவே பிசிசிஐ யும் இந்திய அணி தேர்வுக்குழுவும் திட்டமிட்டு செய்ற்படுவது நன்று.